27 January, 2012

காசு மேலே காசு வந்து

விவசாய பொருட்கள் விளைச்சலைப் பொருத்து ஒரு நாள் விலை உச்சத்தில் இருக்கும், மறு நாள் அதல பாதாளத்தில் இருக்கும். ஆனால் செயற்கையாக உருவாக்கப்படும் விஷயங்களில் இது போல் ஏற்றத்தாழ்வுக்கு காரணங்கள் பல நேரங்களில் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில்லறை காசுகள் அந்த ரகம் தான். சில வருடங்களுக்கு முன் சில்லறை காசுகள் சீ,சீ என்று சீரழிந்து கொண்டு இருந்தன. லாரியில் எல்லாம் சில்லறை காசுகள் மூட்டை கட்டி பயணம் செய்தது. ஒவ்வொரு வியாபாரியின் கல்லாவிற்கு கீழே சில்லறை காசுகள் பாக்கட்,பாக்கட்டாக கிடந்தன. இன்று நிலைமை தலைகீழ். சில்லறை காசுகள் வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு 10 முதல் 20 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. 1,2,5 ரூபாய் சில்லறைகளைப் பொருத்து கமிஷன் மாறுகிறது. 

இருந்த சில்லறைகள் எல்லாம் என்ன ஆயிற்று. RBI வழக்கம் போல் கணக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறது. இத்தனை மில்லியன் சில்லறை காசுகள் வெளியிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அடித்த காசுகள் ஒரு ஒழுங்கு முறையில் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. 50 காசுக்கும் 5 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை, 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை. இப்ப 50 காசை முன்பு வெளியிட்ட சின்ன 10 பைசா சைஸில் வெளியிட்டுள்ளார்கள். ஏன் இந்த கொலவெறின்னு தெரியல.

பொருத்து, பொருத்துப் பார்த்த மும்பை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவங்க சில்லறைப்பஞ்சத்தைப்போக்க அவங்களே கோதாவில இறங்கிட்டாங்க. வேறென்ன சில்லறைக்காசை அவங்களே அடிச்சிக்கிட்டாங்க. நலல வேளையா ஒரிஜினல் காசு மாதிரியே அடிக்காம முன்பக்கம் காசோட மதிப்பும் மறுபக்கம் அவங்க சங்கத்தோட பெயரையும் போட்டு அடிச்சு வெளியிட்டு விட்டார்கள். மும்பையில் அவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஒரிஜினல் காசுகளுக்கு பதில் இவர்களின் காசுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் புலங்கிக்கொண்டு இருக்கிறது.
RBI யிடம் கேட்டதற்கு எங்களுக்கு இது சம்பந்தமாய் எந்த புகாரும் வரவில்லை என்றிருக்கிறார்கள். ஆனால்  இது ஒன்றும் புதிதில்லை. 1985 ம் வருட குமுதம் இதழில் வந்த துணுக்கு ஒன்று.


டெல்லியில் உள்ள சில்லறைப் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற 10 பைசாக் கூப்பன்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். பஸ்ஸில் மட்டுமல்ல, இந்தக் கூப்பன்களைக் கடை, ஓட்டல்,தியேட்டர் எங்கு வேண்டுமானாலும் கொடுத்துத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

சிகரம் வைத்தாற்போல் நான் புது டில்லியை விட்டு புறப்படும்போது பாக்கெட்டிலிருந்த சில கூப்பன்களை ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டான்.
                                                                                                         - ஜி.மோஹன் சந்திரன்.பெரிய நிறுவனங்களில் சம்பளத்துடன் Cash Coupon என்று கொடுக்கிறார்கள். அதை குறிப்பிட்ட ஸ்டோர்களில் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கிளப்களில் கொடுக்கப்படும் டோக்கன்கள் கூட ஒரு வகையில் இது போன்ற மாற்று ஏற்பாடு தான். ஆனால் என்ன ஒன்று, மும்பை வியாபாரிகள் இந்த தடவை ஒரிஜினல் காசு போலவே தோற்றமளிக்கும்படி அவர்கள் காசை அடித்துள்ளதால் கேள்வி எழுந்துள்ளது.

வருடகணக்காக உள்ள இந்த சில்லறைத் தட்டுப்பாட்டை தீர்க்க அரசு எந்த ஒரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. விலைவாசியை தான் குறைக்க மாட்டிக்கிறாங்க, தேவைக்கேற்ற காசு கூட அடிச்சு தர முடியவில்லை.


மீண்டும் சந்திப்போம்.


25 January, 2012

சச்சினுக்கு மேலும் நெருக்கடி

சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் முன்பு ஒரு தடவை கொடுத்த பேட்டியில் 'நான் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் முதல் தடவை களம் இறங்குவது போல் நினைத்துக்கொண்டு தான் விளையாடுவேன்' என்றார். அதனால் தானோ என்னவோ அவர் தனது 100 வது சதத்தையும் முதல் சதம் அடிப்பது போலவே பதட்டத்துடன் எதிர்கொள்கிறார். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக மனிதன் போராடிக்கொண்டிருக்கிறார். பார்ம் இல்லையென்றாலும் பரவாயில்லை. நல்ல பார்மிலும் இருக்கிறார். சமீப காலங்களில் நடந்த தொடர்களில் இந்திய அணியில் அதிக ரன் எடுத்தவர் அவர் தான். பிறகாலங்களில் சச்சின் சாதனைகள் எந்த அளவுக்கு பேசப்படுமோ, அந்த அளவுக்கு அவரின் பதட்டங்களும் மனோதத்துவ  வல்லுனர்களால் அலசப்படும். சச்சினின் 100 வது சதத்தை எதிர்பார்த்து பொறுமை இழந்தவர்களின் காமெடி கலாட்டா கீழே.அடுத்து பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி

2002 ம் ஆண்டில் சச்சின் மற்றும் கங்குலியை கடத்த திட்டமிட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 6 பேர்களின் மேல் முறையீட்டில் அவர்களின் விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 8 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே 9 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால் ஒருவர் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்படுள்ளனர். ( ஒருவர் மட்டும் தனனை நிரபராதி என அறிவிக்க வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்.) மேட்டர் என்னன்னா! சச்சினை கடத்த திட்டம் போட்டவரு வெளியே வந்துட்டாரு. சச்சின் 100 வது சதத்துக்கு பூச்சாண்டி காட்டிக்கிட்டே இருக்காருன்னு கோபப்பட்டு அவங்களை வெளியே விட்டுட்டாங்களான்னு கேட்கக்கூடாது. அது வேற நியூஸ், இது வேற நியூஸ். சச்சின் இதோ இப்ப செஞ்சுரி போட்டிருவாரு, பார்த்துக்கிட்டே இருங்க.

சச்சின் இன்னும் 100 தடவை 100 அடிக்கவில்லை என்பதால் 1000 பேர் 1000 சொல்வாங்க!., அதை எல்லாம் மனசுல வைச்சுக்காம விளையாட்டிற்கான முதல் பாரத ரத்னா விருது சச்சினுக்கு கொடுத்திருங்கப்பா!. (சச்சின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என நினைக்கிறேன்.) பின்னாடி பீல் பண்ணாதீங்க. வேற எந்த விளையாட்டிலும் உலகம் போற்றும் நபர் இந்தியாவில் இல்லை என்பதை மனசில வைச்சுக்கோங்க.மீண்டும் சந்திப்போம்.


24 January, 2012

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்

நெட் கனெக்சன் இல்லாமல் இயங்கும் வெப்சைட் பார்த்திருக்கிறீர்களா?. ரஜினியின் பவரால் இயங்கும் தளம் இது என புல்லரிக்க வைக்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம் Offline ல் மட்டுமே வேலை செய்யும்படி உருவாக்கியுள்ளார்கள்.ரஜினியின் பெயரைச் சொல்லி ரவுண்டு கட்டி வரும் காமெடிகள் வடக்கில் அதிகம். அட! இது நமக்கு தோணாம போச்சே? என்று S.P.முத்துராமனும்,K.S ரவிக்குமாரும் மிரளும் படி சில காமெடிகளும் உள்ளது. சாம்பிளுக்கு சில :

ரஜினி ஒரு தடவை குதிரையின் கழுத்தில் ஒரு குத்து விட்டார். பின்னாளில் அதன் சந்ததி தான் ஒட்டகச்சிவிங்கி ஆனது.

இண்டெலின் புதிய விளம்பரம்  . 'Rajnikanth Inside'

ரஜினி 100 மீட்டர் ரேசில் முதலாவதாக வந்தார். பார்த்த Einstein பட்டுனு போயிட்டார். காரணம் லைட் இரண்டாவதாக வந்தது.

ரஜினி Titanic படத்தில் நடித்திருந்தால் Climaxல் ஒரு கையில் ஹீரோயினையும், மறு கையில் டைட்டானிக் கப்பலையும் பிடித்துக் கொண்டு நீந்தியே கரையேறி இருப்பார்.

Nokia அடுத்து 'R' (Rajnikanth) series போனை வெளியிடுகிறது.
Features:
1 Year Battery Backup
20 Sims
1000 Megapixel Camera
TV
Washing Machine
Fridge
Micro Oven
Rocket Launcher
AK 47

சாம்பிளுக்கு ஒரு படம்
சாம்பிளுக்கு ஒரு வீடியோ

இப்பொழுது Latest ஆக ரஜினியின் பவரில் இயங்கும் இணையதளம்.

இந்த தளத்திற்கு சென்றவுடன் இணைய இணைப்பை துண்டிக்க சொல்கிறார்கள். அதன்பின் தான் உள்ளேயே செல்கிறது. நன்றாகவே இருக்கிறது. சின்ன சின்ன விபரங்களுடன் Flashல் கொடுத்துள்ளார்கள்.எல்லாம் HTML கைங்கர்யம் தான், ஆனால் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். நாங்கெல்லாம் தீவிர ரஜினி ரசிகர்களப்பா! நீங்க என்ன காமெடி பண்ணினாலும் அதையும் ரசிச்சு பார்ப்போம்.(எவ்வளவோ பாத்துட்டோம், இத பார்க்க மாட்டோமா?)

பாராட்டியோ,திட்டியோ,நக்கலடித்தோ பல பேர் அவரால் பலனடைந்து கொண்டிருக்கிறார்கள்.  அது தான் ரஜினியின் பவர்.மீண்டும் சந்திப்போம்.
23 January, 2012

சென்சார் படங்கள்

பொதுவாக Censor என்ற வார்த்தை Examine செய்வது, தேவையில்லாத விஷயங்களை மறைப்பது போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் எனக்கு (நமக்கு!) சென்சார் என்றாலே பலான காட்சிகளை தான் நினைவு  - படுத்துகிறது.  சென்சார் போர்டு என்ற அமைப்பே தேவையில்லை என்று சிலரும், சென்சார் போர்டு ஒழுங்காக தங்கள் கடமையை செய்வது இல்லை என்று பலரும் காலங்காலமாக குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஒரு படத்தில் அனுமதிக்கப்பட்ட காட்சி/ வசனம் மற்றொரு படத்தில் மறுக்கப்பட்டுள்ளது. கிளாமரின் அளவுகோலும் படத்துக்கு படம் மாறுகிறது. காரணம் பல இருந்தாலும் யார் படம், யார் ஆட்சி என்பதும் பல விஷயங்களை முடிவு செய்வதால் சென்சார் போர்டை ஒரு நல்ல அமைப்பாக கருத முடியாது என்று தான் தோன்றுகிறது.முன்பெல்லாம் பாடல் காட்சிகளில் பாடல் வரிகள் நிறைய சென்சார் போர்டால் மாற்றப்பட்டுள்ளது. கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இடம் பெறும். ஒரு முறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 

'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால
அத வைக்கிறப்ப சொக்கனும்  தன்னால"

என்று ஆரம்பிக்கும் பாடலில் 'அத வைக்கிறப்ப' என்ற சொல் தப்பான அர்த்தம் வருவதாக சொல்லி சென்சாரில் ஏற்றுக்கொள்ளவில்லை,சாதாரணமாக எழுதிய பாடலை பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது? என்றார். ஆரம்பத்தில் இருந்து சென்சார் மேல் கொஞ்சம் கடுப்பில் இருப்பவர் கமல். ( விளையாட முடியலே இல்ல!)   பின்னர் அந்த பாடல் 

" நான் பூவெடுத்து வைக்கனும  பின்னால   
அதில் வஞ்சி மனம் சொக்கனும் தன்னால"

என்று படத்தில் இடம் பெற்றது. (இரண்டாவது வரியில் மட்டும் Recording வித்தியாசமாக கேட்கும்). 'அந்த நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேன்', 'மலை,மலை. மருதமலை' போன்ற பல பாடல்கள் சென்சாரால் மாற்றம் செய்யப்பட்டவை. இது போல் நிறையவே இருக்கிறது. இப்போது வரும் பாடல்கள் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் சென்சார் பிடியில் இருந்து எளிதில் தப்பித்து விடுகிறது.அதுவும் போக இப்பொழுதெல்லாம்  கட்சி, ஜாதி, மதம் போன்றவற்றை   பாதிக்கிற மாதிரியான விஷயங்கள் இருக்கிறதா என்று தான் அதிகமாக பார்க்கிறார்கள்.

படங்களுக்கு Censor certificate வழங்கும் Central Board of Film Certification தளத்தில் ஏதாவது படத்தின் பெயரை கொடுத்து தேடினால் அந்த படத்தில் கட் செய்யப்பட்ட வசனம் / காட்சி பற்றிய விஷயங்கள் கிடைக்கிறது.


நண்பன் படத்தில் தடை செய்யப்பட்ட காட்சிகள்  / Mute செய்யப்பட்ட வசனங்கள்.

1) அடீங்க
2) புடிங்கீட்ட
3) நாதாரி
4) இலங்கை
5) Personal  Properties
6) கொங்கைனா லேடிஸ் ............
7) மூன்று முறை வரும் 'கற்பழிக்கும் கர்ணன் விருமாண்டி' ஒரு முறையாக
    குறைக்கப்பட்டது.
8) 'Kingsum தீர்ந்தால்' -( Heartlay Battery பாடலில்)
9) இருக்கானா பாடலில் Cleavage மற்றும் Belly காட்சிகள்
என மொத்தம் 16 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசுத்துறையின் இலக்கணத்தை மீறாமல் மெதுவாக Update செய்வார்கள் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல்லான 'மேதை' படத்தைப்பற்றிய விபரங்கள் காணவில்லை.

டிஸ்கி:

சென்சார் கொடுக்கும் Certificate ல்
1)   U
2)   A
3)   U/A
கேள்விப்பட்டிருப்பீர்கள். ' S ' என ஒரு Certificate ம் கொடுக்கிறார்கள். தெரியுமா?
குறிப்பிட்ட பிரிவினருக்கான படமாம். (Specially For Doctors மாதிரி). அது போல் ஏதாவது படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? தெரியப்படுத்துங்கள்.


மீண்டும் சந்திப்போம்.21 January, 2012

இளையராஜாவின் புதிய படங்கள் மயிலு, பிரசாத்

இளையராஜாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் லேட்டான பொங்கல் பரிசாக ஒரு வார இடைவெளியில் இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகி உள்ளது. முதலில் கன்னட படமான பிரசாத்

உண்மையிலேயே காது கேட்காத, வாய் பேசாத சங்கல்ப் என்ற அழகான சிறுவன் மற்றும் நமது ஆக்சன் கிங் அர்ஜூன்,மாதுரி பட்டாச்சார்யா நடித்துள்ள இந்த படத்தை இளையராஜா,அர்ஜீன் என எல்லோரும் மன நிறைவை தந்த படம் என இசை வெளியீட்டு விழாவில்  பாராட்ட, தயாரிப்பாளர் மட்டும் இது ஆர்ட்பிலிம் மட்டும் இல்ல! , நல்ல கமர்சியலும் இருக்கு என்றார்.(காசு போட்டிருக்கார்ல!)

பாடல்கள்:

1) நானு நீனு                                -     மது பாலகிருஷ்ணன், ரீட்டா
2) ஓ, நன்ன கந்தா                     -     கார்த்திக்
3) ஓ, நன்ன கந்தா (BIT)           -     பேபி ஹரிப்பிரியா, டீட்டா
4) ஓ, நன்ன கந்தா (BIT)           -     கார்த்திக்
5) ஒன்று அரமனே                   -      இளையராஜா,அனிதா,ரீட்டா,சுர்முகி
6) We Are Ok                                 -      Sonu nigam chorus     (இசை :  மனோ மூர்த்தி)


மொத்தப்படத்தையும் தூக்கி நிறுத்துவது முதல் பாடல் நானு,நீனு தான். சூப்பராக இருக்கிறது. மூன்று தடவை இடம் பெறும் ஓ,நன்ன கந்தா பாடல் நன்றாக இருந்தாலும் காதல் ரோஜாவே படத்தில் இட்ம் பெற்ற 'மனம் போன போக்கில்' பாடலை நினைவுப்படுத்துகிறது. இளையராஜா மற்றும் பலர் பாடும் பாடல் - As Usual Raja. கடைசி பாடலை (We Are Ok) மனோ மூர்த்தி என்பவர் இசையமைத்திருக்கிறார்.(Nothing Special.).  Re-recording ல் நிச்சயம் பட்டைய கிளப்பியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கதையும், களமும் அமைந்து விட்டால் அங்கு  ராஜாவின்  ராஜாங்கம்  தான்.


அடுத்து மயிலு.


16 வயதினிலே வந்த சமயத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர். இன்று வரை பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது. 16 வயதினிலே வந்த சூட்டோடு இரண்டாம் பாகம் மாதிரி மயிலு என்ற பெயரில் இளையராஜா இசையில் வந்திருந்தால் படம் சுமாராக இருந்திருந்தாலும் பாடல்களுக்காகவே சக்கை போடு போட்டிருக்கும். என்ன செய்ய கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. காலமும், தமிழ் படங்களும் நிறைய மாறி விட்டது. இளையராஜா மட்டும் இன்னும் மாறவில்லை என மயிலு பாடல்கள் சொல்கிறது. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் என்னைப் போன்றோருக்கு இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப பிடித்து போய் விட்டாலும் எல்லோருக்கும் பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.

படத்தில் 6 பாடல்கள்:

1) யாத்தே                                        -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி
2) துக்கமென்ன                              -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா
இரண்டு பாடல்களும் பழைய ராஜாவே தான். நன்றாக இருக்கிறது.
3) ஆத்தி சொக்க                             -            ரீட்டா
4) கல்யாணமாம் கல்யாணம்   -            ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு
வழக்கமான இளையராஜா பாடல்கள்.
5) என்ன குத்தம்                               -             இளையராஜா, தர்ஷினி
காலம்காலமாக கேட்ட இளையராஜாவின் சோகப்பாடல்.
6) நம்மளோட பாட்டு தாண்டா  -             கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ்
பாடல் - இயக்குனர் ஜீவன். (எல்லா பாடல்களும் அவர் தான் எழுதியுள்ளார்) எங்க பாட்டு தான் நல்ல பாட்டு, மற்றவர்கள் பாட்டு எல்லாம் குப்பை என்ற ரீதியில் எழுதியுள்ளார். ஜீவன் போன்றோர் அடிக்கும் ஜால்ரா இளையராஜாவின் இசையை தான் பாதிக்கிறது என்பதை அவர் போன்றோர் ஏனோ உணருவதேயில்லை. இன்னும் பழைய வேகம், ஏனோ தானோ வரிகள் என்று இல்லாமல் கொஞ்சம் மெனக்கெட்டால் கூட நிறைய இசைப்புதையல் கிடைக்கும். செய்வாரா ராஜா?

1980 களின் இசை ரசிகர்களுக்கு பிரசாத், மயில் இரண்டும் சர்க்கரைப் பொங்கல் தான்.

மீண்டும் சந்திப்போம்.


15 January, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

முடிந்து போன போகி
இன்றைய பொங்கல் / தமிழ் புத்தாண்டு (!)
நாளைய மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம்
நாளை மறுநாள் உழவர் திருநாள்
எல்லாத்துக்கும் சேர்த்து பொங்கலோ பொங்கல்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!அப்புறம், Discovery channel தமிழ் டி.வி.ல பொங்கல் வாழ்த்துக்கள் அப்படின்னு ஒரு வீடியோ போட்டாங்க, பாட்டு சூப்பரா இருந்தது. பாருங்கள்.


மறுபடி, முதல் 6 வரிகளை படிச்சுங்கோங்க!

மீண்டும் சந்திப்போம்.


11 January, 2012

கோன் பனேகா கோடீஸ்வரன் விளையாட ரெடியா?

அமிதாப்,ஷாருக்கான்,சரத்குமார் என பல நடிகர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் நடத்திய KBC என சுருக்கமாக அழைக்கப்படும் குரோர்பதி புரோக்ராம் இப்பொழுது விஜய் டிவியில் சூர்யா மூலமாக வருகிறது. அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக அறியப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போழுது லாபம் கொழிக்கும் நிகழ்ச்சியாக உருமாறியதற்கு முக்கிய காரணம் Mobile மற்றும் SMS தான். சர்வசாதாரணமாக SMS அனுப்புங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். மக்களும் விரல் தேய,தேய அனுப்பி குவிக்கிறார்கள். ஒரு SMS என்ன Charge என்று தெரியுமா என்று கூட தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் கவலைப்படுவதில்லை. லாட்டரி டிக்கட் மாதிரி மனதை தேற்றிக்கொள்கிறார்கள். (வந்தா லாபம் தான!) வியாபார உலகில் இதெல்லாம் சகஜம் தான்.
இது ஒரு Flash Game அப்படியே கோன் பனேகா குரோர்பதி போலவே வாய்ஸ் கூட அமிதாப் மாதிரியே இருக்கிறது. விளையாடிப்பாருங்கள். செலவும் இல்லை, வரவும் இல்லை. சும்மா டைம் பாஸ் தான். எத்தனை கேள்விகளுக்கு விடை தெரிகிறது என்று பெருமை பட்டுக்கொள்ளலாம். அதிகம் கேள்விகள் இல்லை என்ற ஒரு குறை தான். மற்றபடி Crorepati நிகழ்ச்சி மாதிரியே தான் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.


10 January, 2012

நாய் பொழப்பு

நொந்து நூடுல்ஸ் ஆகி  செத்து சுண்ணாம்பாகி சொல்ற டயலாக் இல்ல!  மெய்யாலுமே ஒரு நாயோட பொழப்பு தான் இது. நான் இருக்கிற தெரு சந்து மாதிரியும் இல்லாம ரோடு மாதிரியும் இல்லாம ரெண்டுக்கும் நடுவில இருக்கிற மாதிரியான, ரெண்டு பெரிய ரோடுக்கு நடுவில இருக்கிற கொஞ்சம் பெரிய சந்து. தெளிவா புரிஞ்சிருச்சில்ல!.  தீடீர்னு ஒரு நாள் எங்க சந்துல ஒரு VIP வந்துட்டாரு. வேற யாரு? ஒரு நாய் தான். குட்டி நாய்ங்க தீடீர்,தீடீர்னு புது ஏரியாவில வந்து வளர்றது சகஜம். ஆனா எங்க தெருவில வந்தது ஒரு பெரிய கருப்பு நாய். யார் கொண்டு வந்தா?, எப்படி வந்ததுன்னு யாருக்கும் தெரியல!. 
எனக்கு நாய்ங்கனாலே அலர்ஜியோ அலர்ஜி. தனியா சுடுகாட்டுக்கு போயிருவியான்னு யாராவது கேட்டா, நாய் இருக்குமானு தான் மொத கேள்வி கேட்பேன். பேயையெல்லாம் சமாளிச்சிடலாம். ( நாம பாக்காததுதா?). நைட் ஷோ போறதுன்னா கூட நாய் இல்லாத ஏரியால இருக்கிற தியேட்டரா பாத்து தான் போறது. அப்படி ஒரு பாசம். இப்ப தெருவில வந்திருக்கிற நாயோ சிடு,சிடுன்னு பாக்கிறதுக்கே பயங்கரமா இருந்துச்சு. எனக்குத்தான் அப்படி தோணுது போல!, ஏரியாவில சில பேர் அத அப்படி கொஞ்சறாங்கப்பா!. சில மேனகா காந்தி சொந்தக்காரங்க தயவில அதுக்கும் வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்க, அதுக்குன்னே செஞ்ச மாதிரி இருந்த ரெண்டு வாசற்படிக்கு இடையே இருந்த Gap ல செட் ஆயிருச்சு.


பார்க்க முரட்டுத்தனமா இருந்தாலும் அந்த நாய் குரைத்து ஒரு தடவை கூட நான் பார்ததில்லை. பெரியவங்களுக்கு அந்த நாயாலே சின்ன, சின்ன தொந்தரவு இருந்தாலும், சின்ன பிள்ளைகளுக்கு அந்த நாயாலே பெரிய தொந்தரவா இருந்தது. நம்ம கையில ஏதாவது பையோ, பொருளோ கொண்டு வந்தால் நாயும் பின்னாடியே வந்தது. வேற ஒண்ணும் செய்யாது. பாவமா பின்னாடி வரும். ஏதாவது கொடுங்கப்பா? என்கிற மாதிரி!. ஆனா சின்னப்பிள்ளங்க நாய் பின்னாடி வந்தா பயந்து ஓட ஆரம்பிக்க, நாயும் பின்னாடியே விரட்ட பெரியவங்க யாராவது விரட்டி விட வேண்டியதா போச்சு. தீடீர்னு ஒரு நாள் நாயை காணோம். யாரோ Complaint செய்து யாரோ கொண்டு போயிட்டதா சொன்னாங்க. யார் கொண்டு வந்தா, எங்கிருந்து வந்ததுன்னு தெரியாம வந்த மாதிரியே, யார் கொண்டு போனாங்க, எங்க போச்சுன்னு தெரியாமயே போயிருச்சு. 


ஆனாலும் அந்த இடத்தை கடக்கும் போது எல்லாம் கண்கள் தானாக நாய் படுத்து இருந்த இடத்தில் நாயை தேடுகிறது. சின்னப்பசங்க அந்த இடத்தை கடக்கும்போது எல்லாம் அனிச்சையாக தள்ளிப்போய் கடக்கிறார்கள் மானசீகமாக நாயை கற்பனை செய்து கொண்டே!

மீண்டும் சந்திப்போம்.
07 January, 2012

செக்குக்கு செக்

முன்பெல்லாம் பெரும்பாலான ஆபிஸ்களில் பேங்க் வேலைகளுக்கென்றே  தனியாக ஒரு ஆளை வேலைக்கு வைத்திருப்பார்கள். Officeலயே பொறுமையின் சிகரமாக இருக்கிற ஆளு தான் அதுக்கு லாயக்கு. சர்வசாதாரணமாக அரைநாள் பொழுது ஓடி விடும்.  இப்ப எவ்வளவோ தேவலை. பணம் எடுப்பது, செக் போடுவது போன்ற வேலைகள் பேங்குக்கு வெளியிலேயே முடிந்து விடுவதால் பேங்கில் பாதி கூட்டம் காலி. மேலும் வங்கி கிளைகளையும் அதிகப்படுத்தி விட்டார்கள். வங்கிகளும் அதிகமாகிவிட்டது. தனியார் வங்கிகள் உள்ளே நுழைந்தது தான் இந்த மாற்றங்களுக்கு பெருமளவு காரணம் என்றாலும், Bank Service என்ற காலம் போய் Banking Business என்று மாறி விட்டதால் இந்த மாற்றங்களுக்கு எல்லாம் விலை நம் தலையில் தான். தனியார் வங்கிகள்  Charge செய்யும் விதத்தை பார்த்தால் அதுக்கே தனியாக சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

மேலும் புதிது,புதிதாக யோசிக்கிறோம் என்ற பெயரில் RBI வங்கிகளுக்கு சில விஷயங்களை விரைவில் செயல்படுத்த சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று மொபைல் போன் நிறுவனங்களின் MNP  (செல்போன் நம்பர் மாற்றாமல் கம்பெனி மாற்றிக் கொள்வது) மாதிரி நமது வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த சொல்லியிருக்கிறது. இதில் என்ன பெரிய உபயோகம் என்றே தெரியவில்லை. நாம் என்ன வங்கி எண்ணை ஊர் முழுவதும் தண்டோரா போட்டா சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மாற்றுவதற்கு யோசிக்க!, மேலும் நான் ஆரம்பித்த வங்கி எண்ணே இப்போது என்னிடம் இல்லை. Update செய்கிறோம் என்று 5 எண்ணில் இருந்த கணக்கு எண் 10 எண்ணாகி விட்டது. சரி தான்! Numerology பார்க்கும் யாருக்காவது தேவைப்படலாம்.

அடுத்தது, இப்பொழுது இருக்கும் செக்கை எல்லாம் தூக்கி போட்டு விட்டு எல்லா வங்கிகளும் ஒரே ஒழுங்கு முறையில் Computerized Cheque ஆக வெளியிட ஆணையிட்டுள்ளது. அதாவது, ATM Machine ல் கார்டை நுழைத்தவுடன் நமது வண்டவாளம் எல்லாம் தெரிந்து விடுவது போல், அனைத்து வங்கி கிளைகளிலும் ஒரு Machine ஐ வைத்து அதில் நாம் கலெக்சனுக்கு போடும் செக்கை நுழைத்தவுடன் துட்டு இருக்கா? இல்லையா? என புட்டு, புட்டு வைத்து விடும். இப்பொழுது Any Where Cheque  இருந்தாலும் Rural பகுதிகளில் கலெக்சன் போட்டால் அது அருகில் இருக்கும் பெரிய நகர கிளைக்கு வந்து பின் தான் கலெக்சன் ஆகும். அதற்கு மூன்று நாட்களாவது ஆகும். சாதாரண செக்காக இருந்தால் சொல்லவே வேண்டாம். செக் கலெக்சனுக்கு போட்டதை மறந்து போன பிறகு தான் நமது அக்கவுண்டுக்கே பணம் வரும். RBI சொல்லியபடி எல்லா வங்கிகளும் செயல்படுத்தி விட்டால் செக் கலெக்சனில் தேவையில்லாத கால தாமதம் மற்றும் தபால் செலவு போன்றவை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
டிஸ்கி:

செக் நாம் கலெக்சனுக்கு போட்டிருந்தால் சந்தோசம், ஆனால் நாம் பிறருக்கு கொடுத்திருந்தால் உடனே கலெக்சனுக்கு வந்திரும் ஜாக்கிரதை. இந்த முறை அமுலுக்கு வந்தால் Plan பண்ணி எல்லாம் செக் கொடுக்க முடியாது, 

கையில காசு பார்டியிடம் செக்.


மீண்டும் சந்திப்போம். 05 January, 2012

நல்லதம்பியும் நல்லதண்ணி பாட்டிலும்

நல்லதம்பி பஸ் டிரைவரா வேலை செய்து கொண்டிருக்கும் போது நடந்த விஷயம் இது.  ஒரு நாள் நல்லதம்பி பஸ் ஓட்டிக்கிட்டு இருக்கும் போது அவருடன் குப்பை கொட்டிக்கிட்டு இருந்த கண்டக்டர் தண்ணி குடிச்சிட்டு காலி பாட்டிலை நல்லதம்பிகிட்ட கொடுத்து ' ஒரமா போடுங்க, ஊர்ல போய் தண்ணி பிடித்துக்கொள்ளலாம்' என்றார். நல்லதம்பிக்கு சரியான கடுப்பு. பாட்டிலையும், கண்டக்டரையும் மேலேயும், கீழேயும் பார்த்தார்.  நல்லதம்பி லுக்கைப் பார்த்த கண்டக்டர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'தம்பி,  அதெல்லாம் நான் பார்த்துட்டேன்,  7 தடவை Reuse செய்யலாம் என்று போட்டிருக்கு. நான் 6 தடவை தான் use செய்திருக்கிறேன்' என்றார்.


அதுக்கு நல்லதம்பி ' இதுல மட்டும் இலலை, எந்த Plastic item ஆ இருந்தாலும் அதுல போட்டிருக்கிற நம்பர் Society of the plastic industry (SPI) வரையறை செய்து இருக்கிற தரம் மற்றும் எத்தனை தடவை அந்த plastic- ஐ recycle செய்து கொள்ளலாம் என்கிற விபரங்களை குறிப்பது ஆகும். ( நாம் reuse செய்து கொள்ளும் கணக்கல்ல)
உபயோகிப்பவர்களை பொறுத்தவரை ,பொதுவாக 1,2,3 மற்றும் 4 எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டில்கள் மறு உபயோகத்திற்கு லாயக்கில்லாதவை.
5,6 மற்றும் 7 ஓரளவிற்கு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காது, மேலும் சில தடவை மறு உபயோகம் செய்து கொள்ளலாம். அதற்காக இது மாதிரி உள்ளே இருப்பது தண்ணியா? காபியா? என்று தெரியாத அளவுக்கு மக்கிப்போன பாட்டிலை எல்லாம் யூஸ் செய்யக்கூடாது என்றார். ஒரு பாட்டிலுக்கு இவ்வளவு பெரிய லெக்சரா என்று கடுப்பான கண்டக்டர் 'எனக்கு தண்ணியே வேணாம், அந்த பாட்டிலை தூக்கி வெளியே எறிந்து தொலை! ' என்றார். அதுக்கு நல்லதம்பி ' 4 Track road ல நடுவில செடியா இருக்கிற  பக்கம் தூக்கிப்போட்டா, அதுக்கு தண்ணி ஊத்த வர்றவங்க, பாட்டில்ல சின்ன, சின்ன ஓட்டைப் போட்டு யூஸ் செய்து கொள்வார்கள் என்று சொல்லவும், பஸ் சிட்டியை தாண்டி ரிங்ரோடு வரவும் சரியாக இருந்தது.

4 Track Road க்கு நடுவில அழகா பூ,பூவா பூத்திருக்கிற செடியா நட்டு வைச்சிருக்காங்க. ஆனா நம்ம மக்கள் அதுல ஆடு, மாடுகளையெல்லாம் மேய விட்டுக்கிட்டு இருக்காங்க. அதுங்க மேய்ஞ்சிட்டு,  சாவகாசமா ரோடை கிராஸ் செய்றேன்னு, வேகமா வண்டில போறவங்களையெல்லாம் பீதியை கிளப்பிக்கிட்டு இருக்கு. ஏதாவது விபரீதம் நடந்தால் தான் யோசிப்போம் என்றில்லாமல் இதற்கு உடனே தடை போட்டால் தேவலை. 

ரிங்ரோடு நடுவில சேது மாதிரி ஒரு ஆளு பழைய பாட்டிலை கையில வைச்சிக்கிட்டு  காலி பாட்டில்ல மின்சாரம் எடுக்க முடியுமாங்கிற ரேஞ்சுல ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு. அத பார்க்கவும் நல்லதம்பிக்கு சந்தோசம். கையில இருக்கிற பாட்டில அந்தாளுக்கிட்ட போட்டு விடலாம்னு தூக்கிப்போட்டாரு. ஆனா பாருங்க! ,  அடிச்ச காத்துல பாட்டில் விருட்டுன்னு டயருக்கு அடியில போயிருச்சு. டமால்னு ஒரு சத்தம். தீவிர ஆராய்ச்சில இருந்த ஆளு மிரண்டு போயிட்டாரு. சேது இப்ப லேது.


மீண்டும் சந்திப்போம்.


01 January, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                   அனைவருக்கும் இனிய புத்தாண்டு
                                      நல்வாழ்த்துக்கள்!!!


"God gives you...
12 months of Happiness,
52 Weeks of fun,
365 Days of Success,
52600 Minutes of Good luck,
3153600 Seconds of joy... and that's all ! '
  HAPPY NEW YEAR 2012  


டிஸ்கி:
மீண்டும் சந்திப்போம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...