26 November, 2011

ஜம்மென்று ஒரு ஜெம் போன்

                                                                             நோக்கியா போன் நிறுவனத்தினர்
சமீபத்தில் ஒரு புதிய மாடல் போனுக்கான Concept ஐ வெளியிட்டுள்ளனர்.
இப்போதைக்கு வெறும் அனிமேஷன் வீடியோவை மட்டும் வெளியிட்டு
உள்ளனர். அதே போல் போன் செய்து வெளியிட  எத்தனை வருடங்கள்
ஆகும் என்று தெரியவில்லை. அதற்குள் சீனா வெளியிடாமல் இருந்தால்
நோக்கியாவிற்கு சந்தோசம் தான்.
           
                                                                             கிராபிக்ஸ்  தானே என்று இஷ்டத்துக்கு
டிசைன் செய்தது போல் ஆப்சன்ஸை அள்ளி வீசி இருக்கிறார்கள்.

  •  முன்பக்கம், பின்பக்கம் என்று எல்லா பக்கமும் Display
  •   எல்லா சைடும் Touch Screen
  •   வட்டம் போட்டா கேமரா வருது.
  •   நாம் ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்கும் போது மறு பக்கம் விளம்பரம்    ஒடுமாம். ( பில்லில் அதற்கு ஏற்ற படி Discount கிடைக்குமாம். எப்படி!!)
 அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் புரியும்.


 இதிலென்ன சந்தேகம்னா?

      எல்லா பக்கமும் Touch Screen ஆ இருந்துச்சுன்னா நாம கையில எடுக்கும் 
      போதே ஏதாவது ஒரு ஆப்சன் செலக்ட் ஆகி விடுமே!

      போனை எந்த பக்கம் கீழே வைத்தாலும் Scratch ஆகும் வாய்ப்பு உள்ளதே!

      பேட்டரி எத்தனை மணி நேரம் தாக்கு பிடிக்கும்.

      ரேட் பற்றி நமக்கு கவலையில்லை. ( வாங்கினா தானே! )


எது எப்படியோ,  புதிய டெக்னாலஜியை வேடிக்கை பார்க்கலாம்.மீண்டும் சந்திப்போம்.

    


24 November, 2011

மீடியாவிற்கு மணி கட்ட பார்க்கும் மார்க்கண்டேயர்

                                                                                   தற்போதைய பிரஸ் கவுன்சில்
தலைவரும், முன்னால் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ சமீபத்தில்
CNN கரண் தப்பாருக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் மீடியா மிகவும்
மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மீடியா என்று அவர்
குறிப்பிடுவது டி.வி. மற்றும் பத்திரிக்கைகள்.
( பிளாக் எந்த வகையில் சேரும்?).
                                                                           முன்பெல்லாம் டி.வி. என்பது அரசிடம்
மட்டும் தான் இருந்தது. பத்திரிக்கைகளும் இந்தியாவில் மொத்தம் எத்தனை என்று  எளிதில் எண்ணி விடலாம். ஆனால் இப்பொழுது ஜாதிக்கொரு கட்சி,
கட்சிக்கொரு டி.வி. என்ற நிலைமையில் தான் விஷுவல் மீடியா உள்ளது. 
பத்திரிக்கைகள், ஒன்று கட்சிகள் நடத்துகின்றன அல்லது கட்சிகள் தயவில்
நடக்கின்றன. எனவே செய்திகளில் நியாயம், தர்மம் எல்லாம் எதிர்பார்ப்பது
அநியாயம்,அதர்மம். எந்த மீடியா யாரை சேர்ந்தது என்ற கண்ணோட்டத்தில்
செய்தியை பார்ப்பது / படிப்பது ஒரு வேளை பலன் தரலாம்.

                                                                            ஆனால் ஜனநாயகத்தின் மூன்றாவது
தூண் என்று அழைக்கப்படும் மீடியாவை தாக்குவது என்பது யாராலும் எளிதில்
செய்யக்கூடிய காரியம் இல்லை. மறு நாளே அவர் வில்லன் போல் சித்தரிக்கப்
படும் அபாயம் உள்ளது. ஆனால் பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறோம்
என்ற எண்ணத்தில் திரியை பற்ற வைத்துள்ளார் மார்க்கண்டேய கட்ஜூ.
அதாவது பூனைக்கு மணி கட்ட பார்க்கிறார். அதற்கு வந்த நாடு தழுவிய
எதிர்ப்பிற்கு பிறகும் தன் கருத்தில் இருந்து விலகாமல் தனது விளக்கத்தை
வெளியிட்டுள்ளார். பலன் கிடைக்குமா பார்ப்போம்.அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள்:


                        " மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது "

                        " மீடியா பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை "

                        "மீடியா மக்கள் நலனுக்காக பணியாற்றவில்லை, சில
                          நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன"

                        " சினிமா நட்சத்திரங்கள், அழகிப்போட்டி, கிரிக்கெட் தான் 
                           நாட்டுக்கு அத்தியாவசமான விஷயங்கள் என்பது போன்ற
                           மாயையை உருவாக்குகின்றன."

                         " பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் அரைகுறையாக தான்
                           இருக்கிறார்கள். எகானமிக் தியர்,  பிலாஸபி,  லிட்ரேச்சர்,
                           பொலிட்டிகல் சயின்ஸ் போன்ற விஷயங்களில் ஆழ்ந்த 
                           அறிவு இல்லை."

                          " செய்திகளை உண்மை நிலை அறியாமல் வெளியிடுகிறது"

                           " ஜோசியம், ராசி போன்ற மூட நம்பிக்கையூட்டும்  விஷயங்கள்
                             தான் அதிகளவில் இடம் பெறுகின்றன."


இதறகான தீர்வாக அவர் கூறும் விஷயங்கள்:

                              " டி.வி. சேனல்களையையும்  பிரஸ் கவுன்சில் கீழ் கொண்டு 
                                வர வேண்டும்."

                               " சொல்லித் திருந்தாத மீடியா நிறுவனத்திற்கு அரசு  
                                 விளம்பரத்தை  நிறுத்துவது, லைசன்சை குறிப்பிட்ட
                                 காலத்திற்கு முடக்கி வைப்பது போன்ற அதிகாரம் 
                                 பிரஸ் கவுன்சிலுக்கு வேண்டும். "

                               " தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம் இருக்க
                                 வேண்டும்."

இது பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் என்று எழுந்துள்ள விமர்சனத்திற்கு
அவர் கேட்டுள்ள கேள்வி :

                                " பிரதமர் என்றாலும் ஜன் லோக்பால் கீழ் வரவேண்டும் என்று
                                  சொல்பவர்கள் தங்களுக்கு என்றால் மட்டும் தயங்குவது ஏன்?"

                                " சுய கட்டுப்பாடு என்று சொல்வது எல்லாம் சும்மா!"
மேலே குறிப்பிட்டது எல்லாம் அவரின் கருத்துக்கள்.இது எல்லாம்
நடைமுறைக்கு ஒத்து வராது என்பது மட்டுமில்லாமல், இப்பொழுது
உள்ள அரசியல்வாதிகள் கையில் மீடியாவின் பிடியும் போய்விட்டால்
இந்தியா நாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால்,
இப்பொழுது வரும் பத்திரிக்கைகளைப் படித்தால் அவர் சொல்வது
நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை உணரலாம். மீடியாக்கள் விழித்துக்
கொள்ள வேண்டிய நேரமிது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில்
நிச்சயம் மக்களே இந்த பூனைக்கு மணியை கட்டி விடும் சூழ்நிலை
உருவாகிவிடும்.மீண்டும் சந்திப்போம்.


23 November, 2011

கட்டி வைத்து அடிப்போம்.

                                                        இத நான் சொல்லவில்லை. இந்தியாவின்
காந்தியவாதிகளில் முக்கியமானவரும், மூத்த அஹிம்சாவாதியான
அன்னா ஹசாரே தான்  சொல்லியுள்ளார்.    முன்பெல்லாம்  எங்கள்
கிராமத்தில் தண்ணியடிப்பவர்களுக்கு முதல்  ரவுண்டில்  அறிவுரை
கூறுவோம்.அடுத்த ரவுண்டில் கோவிலில் வைத்து சத்தியம் வாங்கி
விடுவோம். அப்படியும் கேட்காதவர்களை மரத்தில் கட்டி வைத்து
அடிப்போம் என்று கூறியுள்ளார்.
                                           இதற்கு வழக்கம் போல் நம்மூர் அரசியல்வாதிகள்
பொங்கியுள்ளார்கள். தலிபான்கள் முறை போல் உள்ளது என்று ஒரு காங்கிரஸ்காரர் புலம்பியுள்ளார். பி.ஜே.பி. தலைவர்களும் இந்த விஷயம்
நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்கள்.


                                              அது சரி, அவ்வளவு பேரையும் கட்டி வைத்து அடிக்க
வேண்டும் என்றால் மரத்திற்கு எங்கே போவது. நம்மூரில் மரத்தை விட
குடிகாரர்கள் தானே அதிகம். தேமே! என்று இருந்தவரை இந்தியன் தாத்தா
என்று உசுப்பி விட்டு அவர் பாருங்க இப்ப அடிதடின்னு கிளம்பிட்டாரு.
நியாயமா மக்களே?


                                                              அப்புறம், இன்னொருவரை நம்பி விட்ட இணையதளத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்தி வெளியிட்டதாக வந்த
புகாரை அடுத்து அன்னா ஹசாரே தானே நேரடியாக இறங்கிவிட்டார்.
அவரின் இணையதளம்.                                      http://news.indiaagainstcorruption.org/annahazaresays/
மீண்டும் சந்திப்போம்.


21 November, 2011

பரவசமூட்டும் படங்கள்

                                                                           எந்த அசைவும் இல்லாத போட்டோ
மற்றும் அசைவை அடிப்படையாக கொண்ட வீடியோக்கள் நிறைய
இருந்தாலும் இந்த இரண்டுக்கும் இடையில் புகுந்து விளையாடும் சின்ன சின்ன அசைவுகள் கொண்ட GIF படங்கள் நிச்சயம் ஒரு ஹைகூ தான்.
அந்த வகையில் என்னை கவர்ந்த சில படங்கள்.

                           இன்று பிறந்த நாள் கானும் 1,91,78,082 பேருக்கு வாழ்த்துக்கள்

                                                       (700 crore / 365 = 19 178 082.2)  
                                        இனிமே சீக்கரமா வீட்டுக்கு வந்துருவேன்!
                                                    சீக்கிரமா கொடும்மா!  பசிக்குது.


                                ரொம்ப யோசிக்கிறாரே?  இன்னக்கி அம்பேல் தான்.


                                                         நேத்து இங்க தான இருந்துச்சு!


                                                               ஹைய்யா ஜாலி!

           

                                            பார்ரா, தண்ணியெல்லாம் வருது இந்த ஊர்ல!மீண்டும் சந்திப்போம்.17 November, 2011

ஆத்தி இது வாத்து கூட்டம்

                                                                  ஒரு வேலை விஷயமாக நண்பருடன்
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு  வந்து கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட
கரூரின் அருகில் சுமார் 10 கி.மீ. இருக்கும்போது ரோட்டின் இருபுறமும் "இங்கு
வாத்து கறி கிடைக்கும்" என்ற போர்டு நிறைய தென்பட்டது. நன்பர் இந்த இடத்தில் வாத்து கறி ரொம்ப பேமஸ் என்றபடியே  ஒரு கீத்து கொட்டகை முன்பு வண்டியை நிறுத்தினார். ரொம்ப நல்லவங்க! அவங்களுக்கே மனசு கேட்காம  ஒரு இடத்தில கூட ஹோட்டல் என்று எழுதி வைக்கவில்லை.

                                                              ரோட்டின் ஒரத்தில் நல்ல விசாலமான இடம்.
முழுக்க கீத்து வேயப்பட்டிருந்தது. வாசலின் இடதுபுறம் பட்டி போல் கட்டி
விட்டு நிறைய வாத்துக்களை மேய விட்டிருந்தார்கள். பார்க்கவே அழகாக
இருந்தது. வலதுபுறம் ஒரு பெண் வாத்தை நிர்வாணமாக்கி வறுத்து கொண்டு
இருந்தார்.


                                 இவங்க கூட நல்லா மேய்ப்பாங்க  -  வாத்தை


                               "கொன்றால் பாவம் தின்றால் போச்சு" என்ற பழமொழி கேட்க நல்லா இருந்தாலும், ஒரு பக்கம் கொன்று கொண்டே இருக்க, மறுபக்கம் தின்று கொண்டு இருக்க மனசு கேட்காததால், ====> உள்ளே போய் உட்கார்ந்து கொண்டோம் !. உள்ளே என்றவுடன் பெரிய பார்டிஷனை எல்லாம் எதிர்பார்க்க
வேண்டாம். தட்டி வைத்து அந்த இடத்தை நாலு பாகமாக பிரித்து இருந்தனர்.
முதல் பாகத்தில் சமையல் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 3 வது பாகத்தில்
உட்கார்ந்து இருந்தோம். வாத்து கறியுடன் ! இட்லியும், புரோட்டாவும் கிடைக்கிறது. பொதுவாக தரம் தெரியாத உணவகங்களிலும், இடம் தெரியாத
ஊர்களிலும் சிக்கி கொண்டால் இட்லி தான் பெஸ்ட். சாம்பார் சூடாக இருந்தால்
(இட்லி சுமாராக இருந்தாலும்) எளிதில் உள்ளே தள்ளி விடலாம். Side Effect ம்
இட்லியில் பெரும்பாலும் வாய்ப்பில்லை.  ஆனால் என் உடம்பில் பாதி ரத்தமும், மீதி புரோட்டாவும் ஓடுவதால் எந்த ஊர் புரோட்டாவும் என் உடம்பில்
எளிதில் ஒட்டிக்கொள்ளும் என்ற அதீத நம்பிக்கையில் நான் வழக்கம் போல் புரோட்டாவையே ஆர்டர் செய்தேன்.

          மது அருந்த அனுமதியில்லை என போர்டு போட்டிருந்தாலும்.
                                                                                                                     தாலும்,
                                                                                                                           லும்,
                                                                                                                                 ம்,
                                                                                                                                  ம்..ம்..


                                                             நான் சென்ற வேலை முடியாத காரணத்தால்
நான் புரோட்டாவும், வாத்தும் மட்டுமே சாப்பிட்டேன், கண்ணீருடன்.

                                                         கண்ணீருக்கு காரணம் காரம்.

                                                            ஒவ்வொரு டேபிளிலும் தண்ணீர் டம்ள்ரில்
வைக்காமல் செம்பில் வைக்கும் போதே டவுட்டு.  (கரூரில் குடம், குடமாக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது,  சப்பென்று தான் இருக்கும்.)
அது மட்டுமில்லாம தொட்டு கொண்டு சாப்பிட வைத்த குழம்பை, பழக்க தோஷத்தில் புரோட்டாவை பிச்சுப் போட்டு பிணைந்து அடித்து விட்டேன். வாயில் வைத்தால் கண்ணீர் மழையாக பொழியுது. அதையும் மீறி Full கட்டு கட்டி விட்டேன்.  அவ்வளவு டேஸ்ட்.  எதிர்பார்க்கவே இல்லை. அந்த பக்கம்
போகும் வாய்ப்பு கிடைத்தால் சுற்றுப்புறம், சுகாதாரம் எல்லாம் ரொம்ப
பார்க்காமல் ஒரு தடவை உள்ளே போய் சாப்பிட்டு பாருங்கள். அந்த பகுதியில்
உள்ள எல்லா ஹோட்டலிலும் ஓரளவுக்கு இதே டேஸ்ட் தான் உள்ளதாக சொல்கிறார்கள்.                  அப்புறம் , வாத்து கறி சாப்பிட்டால் சளி தொந்தரவுக்கு நல்லதென்று
சொன்னார்கள். ( விற்பவர்கள் )மீண்டும் சந்திப்போம்.12 November, 2011

தோள் கெடுப்பான் தோழன்

                                                                      உலகத்திலேயே ரொம்ப கொடுத்து வைத்த ஆத்மாக்கள் யார் தெரியுமா? எந்த இடமா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் சும்மா படுத்தவுடன் DTS Effect உடன் தூங்கி விடும் நபர்கள் தான். எப்படித்தான் முடியுதோ?   

                                       "SSssssssssssssssssssssssssssssssssssssss"

வேறென்ன பெருமூச்சு தான். ஆனா அதையும் தாண்டி சில பேர் இருக்காங்கநாம் அடிக்கடி பார்க்ககூடிய நபர்கள் தான். பஸ்ல ஏறி உட்கார்ந்தவுடன் தூங்கறவங்கள பத்தி தான் சொல்றேன்.


                                                                                      அதுல பாருங்க! மனைவியிடம் மிதிபடுவோர் சங்கம், அசராமல் அடி வாங்குவோர் சங்கம்  மாதிரி  Bus Sleepers அப்படின்னு ஒரு சங்கம் இருக்குன்னு நினைக்கிறேன்.  அவங்களோட முதல் பரிட்சையே பக்கத்துல  உட்கார்ந்து இருக்கிறவங்கள தேர்ந்தெடுக்கிறது தான். ரொம்ப குண்டாகவும் இருக்கக்கூடாது (இடைஞ்சலா இருக்கும்ல) ரொம்ப ஒல்லியாகவும் இருக்கக்கூடாது ( எலும்பு குத்தும் இல்ல), அடுத்து முக்கியமா மேலே படுத்து புரண்டாலும் முறைக்காத ஆளா இருக்கனும்.  பஸ்ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இந்த ரெண்டு பரிட்சையிலும் பாஸ் ஆகிற முதல் ஆள் நானா தான் இருப்பேன். சங்கத்து ஆளுங்க பஸ்ல ஏறியவுடன் சீட் காலியா இருக்கானு கூட முதல்ல பார்க்க மாட்டாங்க, என்னை மாதிரி ஆள தான்  தேடுவாங்க. சிக்கிட்டோம் அவ்வளவு தான். நாலு சீட்டை தாண்டி குதிச்சு, பத்து பேரை ஏறி மிதிச்சி நம்ம பக்கத்து சீட்டை பிடிச்சிருவாங்க.

                                          உட்கார்ந்ததும் அவங்க வேலைய ஆரம்பிச்சிருவாங்க. அதுக்கப்புறம் நாம தான் கண்டக்டர் வரவும் அவங்கள எழுப்பி டிக்கட் எடுக்க வைச்சு, ஸ்டாப் வரவும் எழுப்பி இறக்கி விட்டு வரணும். நல்ல எண்ணெய் தலையோட பார்ட்டி எறிச்சு நம்ம சட்டை அம்பேல் தான். நமக்கு பஸ்ல ஏறினவுடன் பராக்கு பார்த்தே பழகிப்போச்சு. அதனால என்னா முட்டி மோதினாலும் தூக்கமும் வராது. நானும் ரொம்ப நாளா கவனிச்சி பார்க்கிறேன். அடுத்த சீட்ல உட்காந்திருக்கிறவங்க எல்லாம் டி.வி. பார்த்துக்கிட்டு, வேடிக்கை பார்த்துகிட்டு வர்றப்ப என் பக்கத்துல உட்கார்ந்து வர்றவங்க மட்டும் தூங்கி,தூங்கி விழுகிறாங்களே!  ஏன் பாஸ்?


                                                                           ஆனா இன்னொரு விஷயம் சொல்லியே
ஆகணும் சார்.  நம்ம பிரைவேட் பஸ்ல பாட்டு,  படம்னு போடறாங்க பாருங்க!
அவங்க வைக்கிற சத்ததில பஸ்ஸ்டாப்பில படுத்து இருக்கிற பச்சை பிள்ளைங்க கூட மிரண்டு போய் அழுக ஆரம்பிச்சிரும். சாமி படம் DVD வந்த சமயத்தில பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டுக்கு போன பிறகும் கூட ஹாரிஸ் ஜெயராஜ் காதுக்குள்ள உட்கார்ந்துகிட்டு இருக்கிற மாதிரியே இருந்துச்சு.. பக்கத்துல இருக்கிற பஸ்க்கும் சேர்த்து தான் சவுண்டு வைப்பாங்க. அதுலயும் நம்ம ஆளுங்க  அசராம தூங்குவாங்க பாருங்க. சான்சே இல்லை. மறுபடியும் முதல் வரி தான்.


                                                                                      சரி, விடுங்க, Why Stomach Burn?
"தோள் கொடுப்போர் சங்கம்"  அப்படின்னு  ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். சேர ஆசைப்படுபவர்கள் உடனடியாக அப்ளை செய்யவும். சட்டைதைக்கும் போதே Shoulder ல Sponge வைச்சு தைக்கிறது, Shoulder க்கு என்றே ஸ்பெசலா ஜிம்முக்கு போய் Exercise செய்வது என்று நிறைய ஐடியா கைவசம் இருக்கு. நீங்களும் உங்களுக்கு தெரிஞ்ச ஐடியா இருந்தா கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க. சிட்டி பஸ்ல கூட தூங்கி விழுறாங்க சார்.
                                     "ஸ்டாப் வந்தாலும் எழுப்ப மாட்டீங்களே!"

மீண்டும் சந்திப்போம்.07 November, 2011

கமல் - படத்தில் இல்லாத பாடல்

                                                                          80 களில் படங்களுக்கு பூஜை போடும்
போது  எலுமிச்சை பழத்துடன், அப்பாவை கொன்றவனை பழி வாங்கும்  கதையையும்   எடுத்துக் கொண்டு தான் வருவார்கள். வெளி வரும் படத்தில்
பெரும்பாலான படங்கள் இதே கதையில் தான் வரும். ஆனால் அந்த கதையை
இப்படியும் எடுக்க முடியுமா? என்று வியக்கும்படி 1989ல் கமல் எடுத்திருந்தார்.                                                         
                                                                            'அபூர்வ சகோதரர்கள்'   -   இந்த கதைக்கு
இது போதும் என எண்ணாமல் அந்த படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு தான்
அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது. அப்பு கமலாக டெக்னாலஜி நிறைய
இல்லாத அந்த காலகட்டத்திலும் அற்புதமாக எடுத்திருந்தார். இசை,காமெடி,
சண்டை என எல்லாவற்றிலும் முழு திருப்தியுடன் வந்த அபூர்வ சகோதர்கள்
எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் சேர்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.


  

  ஆனால் படம் கிட்டத்தட்ட பாதி எடுத்து முடித்த நிலையில் அதில் திருப்திஅடையாத கமல் எடுத்த படத்தை அப்படியே பரணில் தூக்கி வைத்து விட்டு நிறைய மாற்றங்கள் செய்து புதுசாக எடுக்க ஆரம்பித்து விட்டார். 
நினைத்து பாருங்கள்!.  
எந்த தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு நினைப்பு வரும். ( அபூர்வ சகோதரர்கள் - ராஜ்கமல் புரொடக்சன்ஸ்).  கமல் செய்தார். ஏன் என்றால் கமல் தனது படங்களை அந்த அளவு காதலித்தார். 

                                                                         இளையராஜாவின் இசையில் கமல்
அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக முதலில் எடுத்த இந்த பாடலை பாருங்கள். எத்தனை  மாற்றங்கள். மனோரமாவிற்கு பதில்  காந்திமதி உள்ளார். ஜனகராஜ் மற்றும் சிவாஜி (காமெடியில் எங்கேயோ போயிட்டாங்க!) வேறு வேறு கெட்டப்பில் உள்ளனர். இந்த பாடலை இளையராஜா வேறு எந்த படத்திலும்
உபயோகப்படுத்தவும் இல்லை.


                                    

      
                                                       இன்று பிறந்தநாள் காணும்
                                                                         கமலுக்கு
                                          தமிழ் பட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
05 November, 2011

இங்கு மூளை பரிசோதிக்கப்படும்


ஒரு சின்ன டெஸ்ட்


உட்கார்ந்த இடத்திலே இருந்து பார்க்கனும்
மவுஸை வைச்சு தடவி பார்த்துக்கிட்டே சொல்லக்கூடாது.


கிளம்புங்க!கீழே இருக்கும் படத்தில் 'C' எங்க இருக்குனு சொல்லுங்க!OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

 


ரைட்.
அடுத்த மேட்டர்
கீழே உள்ள படத்தில் '6' எங்க இருக்குனு பார்த்து சொல்லுங்க!
99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
69999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
 

ஓகேவா!
இப்ப கீழே உள்ள படத்தில் 'N' எங்க இருக்குனு கண்டுபிடிங்க?MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM


எல்லாத்தையும் டக் டக்னு கண்டுபிடிச்சிட்டீங்கனா, நீங்க
Neurologist பக்கம் தலை வைச்சு படுக்க வேண்டியதே இல்லை.
நீங்க நார்மலா தான் இருக்கீங்க.

அப்புறம் 
கீழே உள்ள பாராகிராப்பை கடகடன்னு வாசிச்சிட்டீங்கனா
நீங்க கிங் தான்.I cdnuolt blveiee that I cluod aulaclty uesdnatnrd what I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in what oerdr the ltteres in a word are, the olny iproamtnt tihng is that the frsit and last ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can still raed it whotuit a pboerlm. This is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the word as a wlohe. Azanmig huh? Yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this forwrad it 


(நம்ம மூளை பொதுவா படிக்கும் போது வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தை வைத்து மற்றதை யூகித்துக் கொள்ளுமாம்.)


 
மீண்டும் சந்திப்போம்.

03 November, 2011

கூகிள் வழங்கும் இலவச வெப்சைட்

                                                                                    இந்தியாவில் உள்ள சிறு தொழில்
முதலீட்டாளர்களுக்கு கூகிள் இலவச வெப்சைட் வழங்குகிறது. தொழில்நுட்ப அறிவோ, பணமோ தேவையில்லை. முற்றிலும்  இலவசமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வழங்குகிறது.  கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் நமக்கு ஒரு
வெப்சைட் கிடைத்துவிடும்.

                                                        
    

                                                                        இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மில்லியன்
சிறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 5% மட்டுமே
இணையத்தை உபயோகம் செய்வதாக குறிப்பிட்டுள்ள கூகிள் அதிகாரிகள்
3 வருட காலத்திற்குள் 5 லட்சம் பேருக்கு இலவச வெப்சைட் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


                                                              http://www.indiagetonline.in/


                                                  மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த தளத்திற்கு
சென்று பெயர்,முகவரி,PAN நம்பர் கொடுத்து ஆரம்பித்து கொள்ளலாம்.

கவனத்திற்கு:

1) ஒரு வருடம் மட்டுமே இந்த சலுகை. அதன் பிறகு Domain Name க்கு ஒரு
               தொகையும், பராமரிப்பு கட்டணமாக மாதம் ஒரு தொகையும்
                செலுத்த வேண்டி வரும்.

2) ஒரு வருடத்திற்குள்ளாகவோ, ஒரு வருடம் முடிந்தவுடனோ நமது தளத்தை
                 எப்பொழுது வேண்டுமானாலும் கேன்சல் செய்து கொள்ளலாம்.

3) நமது பெயருடன் .in சேர்ந்து வரும்.


                                                         இது வியாபார நோக்கத்திற்காக இல்லை என
கூகிள் அறிவித்தாலும், பெருவாரியான வணிகர்களை ஆன்லைன் பக்கம்
இழுப்பதற்கான முயற்சியாக தான் தெரிகிறது. இலவசம் என்பதாலும், கூகிள்
என்பதாலும் தைரியமாக வணிகர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். நாம் விரும்பும் பெயர் கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள். வியாபாரத்திற்கு உபயோகம் ஆகும் பட்சத்தில் பணம் கொடுத்தும் தொடரலாம்.                         முயற்சித்து பாருங்கள் புதிய அனுபவமாக இருக்கட்டும்.மீண்டும் சந்திப்போம்.


                                                                        

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...