28 January, 2013

இளையராஜாவை திட்டித்தீர்த்த பாரதிராஜா

தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கே தலையை காட்டாத இளையராஜாவிடம்  இப்பொழுது நிறைய மாற்றங்கள். தான் இசையமைக்காத அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக மதுரை வந்திருந்தார். விஜய் டிவி இசை வெளியீட்டு விழாவை இமயத்திற்கு முதல் மரியாதை என்று உருமாற்றி பல பிரபலங்களுடன் (இந்த படத்தில் பாடல் எழுதியிருந்த வைரமுத்து தவிர) களமிறங்கியது. 
எல்லோரும் பாரதிராஜாவை பாராட்டினாலும் ஒவ்வொரு முறை மேடை ஏறும் போதும் பாரதிராஜா இளையராஜாவை வானளாவ புகழ்ந்தார். என்ன ஒன்று புகழின் உச்சிக்கு கொண்டு சென்று அங்கிருந்து தொம்மென்று கீழே போட்டு விட்டார். தண்ணியடித்திருப்பவர்கள் மத்தியில் தண்ணியடிக்காமல் உட்காந்திருப்பதை விட பெரிய இம்சை எதிரும் புதிருமான இருவருக்கு இடையில், இருவருக்கும் நண்பராய் இருப்பது. பாரதிராஜா அது போன்ற ஒரு தர்மசங்கடமான சுழலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். தனக்காக நடத்தப்படும் இந்த விழாவில் அந்த இருவரையும் ஒன்றாக மேடையேற்றி விடவேண்டும் என்று போராடி கடைசியில் தோற்றுப் போன ஆதங்கம் வெளிப்படையாக தெரிந்தது. 
 நீ என் மேல் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று ஆரம்பித்த பாரதிராஜா மதுரையில் மொட்டைக் கோபுரம் ஒன்று தனியாக நிற்பது உனக்கு தெரியவில்லையா? மன்னிப்பது தான் மனித இயல்பு. மன்னித்து விடு. என்றவர் ,மறுபடியும் ஒன்றாக இணைய வேண்டும் பாரதிராஜா இளையராஜா வைரமுத்து என்று தனக்கே உரித்தான ஒங்கிய குரலில் சொல்லி விட்டு விருவிரு வென்று கீழே இறங்கி விட்டார். இறுகிய முகத்துடன் இளையராஜா பார்த்துக் கொண்டே இருந்தார்.
பிறகு கங்கை அமரனைப் பற்றி பேச்சு வந்த போது "மறுபடியும் இதே பிறவி எடுக்க முடியுமா? தம்பி தானே! அவன் மேல் என்ன கோபம்" என்று ஆரம்பித்தவர், சரி விடு நிறைய பேசி வேண்டி வரும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேறு டாபிக் போய் விட்டார். ஏற்புரையில் G.V.பிரகாஷ்குமார் பற்றி பேசிய போது வாழைமரம் கூட தனக்கு பின் ஒரு குருத்தை விட்டுப் போகிறது உனக்கு பின் ஆள் வேண்டாமா? வருபவர்களை பாராட்ட வேண்டியது தானே! என்றார். அதே சமயம்  என் தாயிடம் கூட கெஞ்சியதில்லை. உன் ஒருவனிடம் தானே பணிந்திருக்கிறேன் என்றும் உருகினார். 
இளையராஜாவின் இசையை போதும் போதும் என புகழ்ந்தார். அதே அளவிற்கு இளையராஜாவின் குணத்தை குற்றம் கூறினார். பேசிய விஷயங்கள் சரி என்றாலும் வேறு இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் பாரதிராஜா என்ற நண்பனுக்காக யுவன், கார்த்திக், பவதாரனி என இளையராஜா தன் குடும்பத்துடன் வந்திருந்ததற்காக கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் பாரதிராஜா. இன்னும் நிறைய பேசினார். எனக்கு தான் மறந்து விட்டது. கட் செய்யாமல் விஜய் டிவியில் போட்டால் பார்த்துக் கொள்ளலாம்.
ஏற்புரை பாரதிராஜா என்று போட்டிருந்தாலும் நிகழ்ச்சி முழுவதும் பாரதிராஜா பேசிக்கொண்டே தான் இருந்தார். வழக்கம் போல் நிறைய ஆங்கிலம் பேசினார். யாருக்கும் மரியாதை தராமல் பேசினார். ஆனால் இளையராஜா மிக சுருக்கமாக தனது பேச்சை முடித்துக் கொண்டார். ரசிகர்கள் பாடச்சொல்லி சததமிட, நான் இங்கு பாட வரவில்லை என்றவர் ரசிகர்கள் தொடந்து கூச்சலிட, பாடாமல் விடமாட்டீர்கள் போல என்று பாடத் தயாரானார். அதற்குள் பாரதிராஜா எதை, எதையோ பேசி திசை திருப்பி விட்டு விட்டார்.
டிஸ்கி:

இயக்குனர் மகேந்திரன் பாரதிராஜாவிற்கும் தன்க்குமான உறவைப் பற்றி பேசும் போது கூறியது, " பாரதிராஜா தனது தாயைப் பற்றி பேசும் போது வார்த்தை வராமல் தடுமாறினார். பாரதிராஜாவைப் பற்றி பேசும் போது நானும் அது போன்ற மனநிலையில் தான் உள்ளேன். என்ன பேசுவது என்றே புரியவில்லை. சினிமாவைப் போல் இங்கும் இளையராஜா ரீரிகார்டிங் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நாம் மனதில் நினைப்பதை நம்மை விட மிகத்திறமையாக வெளிப்படுத்த இளையராஜா ஒருவரால் தான் முடியும்" 

That is Raja 
படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மீண்டும் சந்திப்போம்.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...