11 October, 2011

நரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள்


                
       அரசியல்வாதிகளும், நாமும் காலம் காலமாக மாறாமல் இருக்கிறோம் என்பதற்கு மிக அழகான சான்று இந்த கட்டுரை. ஆரம்ப கால திராவிட இயக்கங்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த கவிஞர் கண்ணதாசன் எண்ணங்கள் 1000 நூலில்  எழுதியது.




   
               நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!
                       
               நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது
போல் எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்!
           
               உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழ வைக்க வந்த
எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்!

                நாங்கள் அரசியல்வாதிகள்.

                நாங்கள் அன்று எப்படி இருந்தோம்; இன்று எப்படி இருக்கிறோம்
என்று நீங்கள் ஆராயக்கூடாது.
           
                அன்று பட்டுக்கோட்டைக்கும் தஞ்சாவூருக்கும் போய்க் கொண்டு இருந்தோம்; இன்று பாரிசுக்கும்,நியூயார்க்கும் போய்க் கொண்டு இருக்கிறோம்.

                 இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக்கூடாது.

                  நாங்கள் சிரிப்பதே உண்மையான சிரிப்பென்றும், அழுவதே
உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்.
                            
                    நன்றி!

                   அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர இடையில்
தளரக்கூடாது.

                     நாங்கள் மேடையில் பேசும்போது நீங்கள் ஆரவாரம் செய்கிறீர்கள்;  உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீரகள் என்று நம்பித் தான் நாங்கள் பேசுகிறோம்; உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

                      நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு.                 எப்பொழுது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும் !

                      எதிர்க்க முடியாத சூழ்நிலையில் தப்பித்தவறி பேசுகிற அந்த உண்மையைப் போலத்தான் நாங்கள் பேசும் எல்லாப் பேச்சுக்களும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.
             
                        நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட,
எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.
             
                       அந்த துண்டு வெள்ளை வெள்ளேரென்றிருக்கிறது. அந்த துண்டின் வெண்மையைப் போல் எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமே.

                        அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா!

                         எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக்கூடாது.

                        எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான் இந்த தொழிலுக்கு வந்தோம். 

                        நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது.

                          நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.

                         ‘மக்கள் சேவையே மகேசன் சேவை, மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
                                
                        நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணக்கூடாது.

                         நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக்கூடிய சக்தி எங்களுக்கு ஏது?
                           
                        அவை எங்கள் மனைவிமார்களின் கார்கள்!
                      
                         அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக்கூடாது.
                 
                        குடும்பக்கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல!

                         சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த
 தலைமுறையில் எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.

                           நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது.
                                     
                          ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை.
                      
                           இந்த வகையில் நாங்கள் ஜவகர்லால் நேருவுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
                
                          ‘அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்’ என்று நீங்கள் ஆச்சரிய்ப்படக்கூடாது.
                   
                           நதிமூலம்,ரிஷிமூலம்,அரசியல்வாதிமூலம் மூண்றும் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை!
                     
                           பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ,அப்படியே பணம்
செர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.
          
                          ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது.
                                
                           அந்தப் பணத்தையும் நாங்கள் பொது மக்களுக்குக்காகவே
சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல!
                 
                            உங்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்குவதற்காக நாங்கள் சில ரேட்டுகளை நிர்ணயித்திருக்கிறோம்.
      
                              உங்களது மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக, மாதம் ஒரு
சர்க்கஸ் நடத்துகிறோம்.

                              உங்களை ‘சோஷலிஸ’ சொர்க்கத்துக்குக் கொண்டு
செல்வதற்காக யார் சோஷலிஸம் பேசினாலும் கூடச் சேர்ந்து ‘கோரஸ்’ பாடுகிறோம்.

                               நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் எந்த விளக்கம் சொன்னாலும் நீங்கள் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.

                          ‘கடைசியாகப் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை’ என்று சொல்லிக் கொண்டே பணத்தை வசூல் செய்துவிட்டு, சண்டையைக் காட்டாமலேயே மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.

                            நாங்கள் ‘வரும் வரும்’ என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.
                         
                           அது வரும் போது எங்களால் தான் வந்தது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!
                      
                          ஊழல் ஊழல் என்று மற்றவர்கள் கூறுவார்கள்; நீங்கள் கவலைப் படக்கூடாது! எந்த நாட்டில் எந்த ஆண்டில் ஊழல் இல்லை?
                  
                          பதினேழாம் நூற்றாண்டில் இல்லையா? பதினெட்டாம் நூற்றாண்டில் இல்லையா? பத்தொண்பதாம் நூற்றாண்டில் இல்லையா?
                            
                           சீஸர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?
 
                            எங்களைக் கண்டால் மட்டுமே வயிறெரிகிற பாவிகள், பாரம்பரியமாக இருந்து வருகிற மரபைப் பற்றி எங்கள் மேல் குற்றம் சாட்டுகிறீர்கள்.
                              
                              ஏழை மக்களே! நம்பாதீர்கள்! இதயத்தில் கை வைத்துச் சொல்கிறோம்; நாங்கள் உங்கள் தொண்டர்கள்.
                            
                                நீங்கள் தலையால் இடும் வேலையைக் காலால் உதைக்க -
மன்னிக்க வேண்டும் -  நாக்குக் குழறி விட்டது! நீங்கள் காலாலிடும் வேலையைத் தலையால் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
                                             
                                ஆகவே, எந்தத் தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,
                              
                               மறவாதீர்கள், எங்கள் நரிக்குட்டிச் சின்னத்தை மறவாதீர்கள்!
                  

                             நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி!


                             வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!



                                                                                                                     இப்படிக்கு,
                                                                                                             ஜனநாயகம் மறவா
                                                                          
                                                                                                              அரசியல்வாதிகள்.




மீண்டும் சந்திப்போம்.

9 comments:

  1. வாழ்க ஜனநாயகம்

    ReplyDelete
  2. @MANASAALI
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  3. @MANASAALI
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  4. @kannan t m
    வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி

    ReplyDelete
  5. உண்மையான ஜனநாயகப் பேச்சு!!

    ReplyDelete
  6. @விச்சு
    வருகைக்கு நன்றி

    ReplyDelete

என்னை திட்டவும், தீட்டவும் கருத்திடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...