31 July, 2012

போலி தமிழ்

போலி அரசியல்வாதி, போலி ஆன்மீகவாதி போல தமிழிலும் போலி இருக்கிறதா என யோசிப்பவர்களுக்கு, இது டுபாக்கூர் போலியோ அல்லது கடையில் விற்கும் போலியோ இல்லை. இது இலக்கணப்போலி. தமிழ் பாடத்தை கட் அடித்து சினிமாவுக்கு போகாமல் படித்து இன்னும் மறக்காமல் இருந்தால் இருந்தால் ஞாபகத்தில் இருக்கும். எனக்கு தமிழ் இலக்கணத்தில் பசுமரத்தாணி போல் ஓரே ஒரு இலக்கணம் மறக்காமல் இருக்கிறது. காரணம் S.V.சேகர். 


அவரின் ஒரு நாடகத்தில் 

ஆசிரியர் : "பல் உடைந்ததா ?"   இது என்ன இலக்கணம் சொல்லு?

S,V,சேகர் :  ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் சார்.

ஆசிரியர் : எப்படிடா கரெக்டா சொன்ன!

S.V.சேகர்  :  ஈறு கெட்டா தான பல் உடையும்.

    ( 'ஆ' -வில் முடியும் சொற்கள் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)

 
இது போல் காமெடியாக எந்த ஆசிரியரும் எனக்கு தமிழ் இலக்கண்ம் சொல்லித் தராததால் மற்ற இலக்கணங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. இலக்கணப்போலி என்பது நாம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் சொற்கள். எழுத்துக்கள் மாறி இருக்கும். ஆனால் அர்த்தம் மாறாது. போலியில் முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி மற்றும் முற்றுப்போலி என நான்கு வகைகள் உள்ளன



 
உதாரணத்திற்கு.

ஐந்து                      -                       அஞ்சு

கால்வாய்           -                        வாய்க்கால்
 
ஐம்பது                  -                       அம்பது

கோவில்              -                        கோயில்

வைத்த                 -                        வச்ச

 
கற்றுத்தருவது ஒரு தெய்வீக கலை. எந்தப் பாடமாக இருந்தாலும் கணிதமோ, அறிவியலோ, மொழிப்பாடமோ ஆரம்பத்தில் நமக்கு கற்றுத்தரும் ஆசிரியர் தான் அந்தப்பாடத்தின் மீது  ஒரு பிடிப்போ, வெறுப்போ வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இப்பொழுது புதிதாக வந்துள்ள பாடத்திட்டங்கள் வெறும் மனப்பாடம் மட்டும் செய்து பள்ளிக்காலத்தை ஓட்டாமல் கொஞ்சம் யோசிக்கவும் வைப்பது போல் தெரிகிறது. பெற்றோர்கள் வீட்டுப்பாடங்களை தாங்களே செய்து கொடுக்காமல் மாணவர்களை செய்யச் சொல்லி ஊக்கிவித்தால் நல்லது.




பள்ளிகளில் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொண்டும், சினிமா படங்களின் தலைப்பில் (மட்டும்) தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தால் வருங்காலத்தில் தமிழின் நிலைமை தமிழனின் நிலை போல் பரிதாபமாக போய் விடும். முடிந்தவரை தமிழ்ப்பதிவர்கள் Labels மற்றும் Search Description-ல் தமிழ் வார்த்தைகள் சேருங்கள். கூகிள் தேடு பொறியில் தமிழில் தேடுங்கள். 
 
இப்பொழுது நாம் பேசும் தமிழில் எத்தனை போலிகள் உள்ளன என சந்தேகப்படுபவர்களுக்கு அண்ணன் வடிவேலுவின் பதில்

நீங்க பிடுங்கிற எல்லாமே தேவையில்லாத ஆணி தான்.



மீண்டும் சந்திப்போம்.


27 July, 2012

மலிவாகிப்போன மனித உயிர்கள்

ஒவ்வொரு நாளும் செய்திதாள்களை படிக்கும் போது வரும் செய்திகளை தாங்கிக் கொள்ள தனி தைரியம் வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை ஆண்,பெண்,குழந்தைகள் என்று பார்க்காமல் தங்கள் சுயநலத்திற்காக ஈவு இரக்கமில்லாமல் கொல்லும் கொடூரர்கள் ஒரு பக்கம்,  மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அசால்டாக செயல்படும் கூட்டம் ஒரு பக்கம்.  சமீபத்தில் வந்த செய்திகள் இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? என்று அச்சம் கொள்ள வைக்கிறது.




முதல் செய்தி தலைப்பு செய்தியாக வலம் வந்த செய்தி.  பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே வெளியே விழுந்து மரணமடைந்த சிறுமி. குழந்தை விழும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஓட்டையுடன் பஸ்சை ஓட்டி வந்த நபருக்கும், அப்படி ஒரு பஸ்சை எந்த வேலையும் பார்க்காமல் அப்படியே அனுப்பிய நிர்வாகத்தினருக்கும் மனித உயிரின் மதிப்பு என்ன என்று தெரியுமா? அல்லது பெற்றோர்களின் வலி தான் புரியுமா?. அந்த பஸ்சின் ஓட்டையை ஏதோ ஒரு பலகை கொண்டு தற்காலிகமாக சரிசெய்ய அதிகபட்சம் 500 ரூபாய் ஆகி இருக்குமா!, இப்பொழுது அந்த மாணவியை இழந்து தவிக்கும் குடும்பத்தின் நிலை என்ன?. 




அடுத்தது
பஞ்சாப் மாநிலத்தில் வெறும் 200 ரூபாய் கட்டவில்லை என்று பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தையின் சுவாச இணைப்பு கருவியை நீக்கியிருக்கிறார்கள். அதனால் அந்த குழந்தை இறந்து விட்டது. சொல்லப்போனால் கொன்று விட்டார்கள். சினிமாவில் வில்லன்கள் தான் இது போல் செய்வது போல் காட்சி வைப்பார்கள். அந்தளவுக்கா ஆகிவிட்டார்கள் நம் சக மனிதர்கள். இரண்டு சம்பவங்களிலும் குழந்தை என்பதால் செய்தியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.  உடனடியாக பள்ளிப்பேருந்துகள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் பல அரசு பேருந்துகள் பெரிய, பெரிய ஓட்டையுடனும் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. பல அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்ற உயிர்கள் ஊசலாடிக்கொண்டு தான் இருக்கிறது
.



மும்பையில் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு வழி விடாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப் போவதாக வந்த செய்தியை கேள்விப்படும் போதும் மனம் கணக்கிறது. மனிதாபிமானம் எங்கே போய் விட்டது. சட்டம் போட்டு செய்ய வேண்டிய விஷயங்களா இது. திண்ணை கலாச்சாரம், தெரு சாமி கும்பிடு என்றெல்லாம் பல விஷயங்கள் சுற்றுப்புற மனிதர்களை ஒன்றினைத்திருந்தது. இன்று கலாசார மாற்றம், லைப் ஸ்டைல் என்றெல்லாம் பெயர் வைத்து ஒவ்வொரு மனிதரும் அருகிலிருந்தும் எங்கோ விலகி போய் விட்டனர். சட்டம் என்றாலே எப்படி தப்பிப்பது என்றும் அப்படியே அதை கடைப்பிடித்தாலும் வேண்டா வெறுப்பாக செய்யும் எண்ணமும் தான் வரும். மனிதனை மனிதன் நேசிக்கும் குணத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சக மனிதனை நேசிக்க போடப்படும் சட்டங்கள் நமக்கு கேவலம் இல்லையா!


மீண்டும் சந்திப்போம்.

 



24 July, 2012

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

மக்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர வைப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல புதுமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. பணக்கார நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் பிரம்மாண்டமும், புதுமையும் பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள அரிஜோனா மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கின் முனையில் வித்தியாசமான முயற்சியாக 'U' வடிவத்தில் ஒரு பாலம் கட்டியுள்ளார்கள், அதுவும் கண்ணாடியில். பள்ளத்தாக்கை கடந்து சிறிது தூரம் கண்ணாடி மேல் நடந்து சென்று வரும்படி அமைத்துள்ளார்கள். கீழே குனிந்து பார்த்தால் அதல பாதாளம் தெரிகிறது.




கிட்டத்தட்ட 4000 அடிக்கும் அதிகமான உயரத்தில் 65 அடி அகலத்தில் சுமார் 70 அடி தூரம் நடந்து சென்று வருவது போல் கட்டியுள்ளார்கள். பங்கி ஜம்ப் மற்றும் தீம் பார்க்கில் உள்ள சில விளையாட்டு விஷயங்களும் அடிப்படையில் இயற்கைக்கு எதிராக சில நொடிகள் நம்மை அழைத்துச் சென்று அடிவயிற்றில் ஒரு சின்ன கிலி ஏற்படுத்தும் முனைப்பில் தான் உருவாக்கப்படுகின்றன. இதுவும் அது போல ஒரு முயற்சி தான். இயற்கைக்கு எதிராகவோ அல்லது இயற்கைக்கு அருகில் செல்லவோ மனிதனுக்கு எவ்வளவு ஆசைகள். ஆனால் அந்த முயற்சியில் ஒரு சதவீதம் கூட கைகூடவில்லை என்று தான் சொல்லவேண்டும். இயற்கை இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது.





சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் பார்ப்பதில் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முண்ணனியில் உள்ளன. நம் நிலை அதள பாதாளத்தில் உள்ளது. இறைவன் கொடுத்துள்ள அதிசயங்கள் நிறையவே உள்ளன. ஆனால் அதை முறைப்படுத்தவோ, மெருகூட்டவோ நம் தலைவர்கள் யாருக்கும் நேரமில்லை. ஆனால் நம் பொருளாதார மேதைகளான தலைவர்கள் ஒருநாள் உணர்வார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலாதுறை முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை. அது வரை, இருக்கிற நல்ல விஷயங்களையாவது அழியாமல் காப்பாற்றினால் போதும். செய்வார்களா?
 



நமக்கு பக்கத்தில் உள்ள கொடைக்கானலில் கூட இது போன்ற அழகான இடங்கள் நிறைய உள்ளன. அங்கு இது போல் Capital 'U ' போன்று அமைக்கா விட்டாலும் Small 'U' மாதிரியாவது அமைக்கலாம். நாங்களும் போய் பார்ப்போம்ல!. அதுவரைக்கும் உசரமான வீட்டு பால்கனில நின்னு குனிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

இது சம்பந்தமான வீடியோ ஒன்று





டிஸ்கி

இந்த கண்ணாடி பாலம் கட்டிக்கொண்டிருக்கும் போது எடுத்த ஒரு வீடியோவும், பயன்பாட்டுக்கு வந்த பின் எடுத்த வீடியோவும் என 2 வீடியோக்கள் இருந்தன. அதில் கட்டிக்கொண்டிருக்கும் போது எடுத்திருந்த வீடியோவின் பிண்ணனி இசை அந்த ஊர் மக்களின் இசை என குறிப்பிடப்பட்டிருந்தது. விதயாசாகர் பார்த்திபன் கனவு படத்தில் அதே இசையை அப்படியே உபயோகப்படுத்தியுள்ளார். அந்த சின்ன பகுதி இசையை பின் பாதி வீடியோவில் இணைத்துள்ளேன். மெலடி கிங் என நான் மிகவும் நேசிக்கும் விதயாசாகருக்கு அந்த சின்ன பிட் இசையில் என்ன கிடைத்து விட போகிறது. மனதை உருக்கும் பல பாடல்கள் தந்தவர் இது போல சின்ன விஷயங்களை தவிர்க்கலாமே!

மீண்டும் சந்திப்போம்




11 July, 2012

ஓய்வு பெற்ற Keeping Gloves


உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் முக்கியமானவரும், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீமின் முதுகெலும்பாக பல ஆண்டுகள் திகழ்ந்தவருமான  மார்க் பவுச்சர் வருத்ததுடனும், வலியுடனும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 


Mark Boucher

 
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்குள்ள உள்ளூர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சக வீரர் இம்ரான் தாஹீர் சோமர்செட் அணியின் பேட்ஸ்மேன் ஜீமாலை போல்டாக்கிய போது ஸ்டெம்பில் இருந்த Bails கீப்பிங் செய்து கொண்டிருந்த பவுச்சரின் கண்ணை தாக்கியது. கருவிழியில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் தவிர்க்க முடியாமல் தனது முடிவை அறிவித்துள்ளார். இனி Ab de Villiers கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கலாம்.


Mark Boucher injury

 
எந்த ஒரு கலையாக இருந்தாலும் மைல்கல் என்பது சந்தோசம் தரக்கூடியது தான். அனைத்து தர கிரிக்கெட்டையும் சேர்த்து 999 பேரை அவுட்டாக்கியுள்ள மார்க் பவுச்சர் இந்த இங்கிலாந்து தொடரில் 1000 வீரர்களை அவுட்டாக்கிய முதல் வீரர் என்ற மைல்கல்லை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் விதி விளையாடியதில் ஒரு எண்ணில் அந்த மைல்கல்லை தவறவிட்டு விட்டார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக 1997ல் இருந்து சுமார் 15 வருடங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்காக டெஸ்ட்,ஒரு நாள், T20 என சகல விதமான ஆட்டங்களிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். அனைத்து வகையான ஆட்டங்களையும் சேர்த்து 10469 ரன்கள் அடித்துள்ள பவுச்சர் 999 பேரை கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் மூலம் அவுட்டாக்கியுள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வராவிட்டாலும் மிடில் ஆடரில் தனது வேலையை சரியாக செய்து வந்துள்ளார். 


Mark Boucher Records

 
35 வயதில் ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் கண்ணில் பட்ட காயம் விரைவில் குணமாகி வர இறைவனை வேண்டுகிறேன்.



விக்கெட் கீப்பர் தைபு

 zimbabwe keeper taibu


ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பரான தைபு தனது ஓய்வை அறிவுத்துள்ளார். இனி இறைவனுக்கு சேவை செய்யப்போவதாக அறிவித்து உள்ள 29 வயதான தைபு உலகின் மிக இளவயது டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். சில காரணங்களுக்காக ஜிம்பாப்வே அணியை விட்டு விலகிய அவருக்கு கொலை மிரட்டல் வரவே தென் ஆப்பிரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். அந்த அணியில் சேர ஆசைப்பட்ட அவர் பிறகு மீண்டும் ஜிம்பாப்வே அணிகே திரும்பினார். தற்போது அவரும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.


மீண்டும் சந்திப்போம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...